புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் வெள்ள சேதங்களை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது. மத்திய அரசு இணைச் செயலர் அசூடோஷ் அக்ரி கோத்ரி தலைமையிலான மத்திய குழுவினர் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று(டிச.6) மாலை புதுச்சேரி வந்தனர். இன்று (டிச.7) காலையில், பத்து கண்ணு கிராமத்தில் வயல்வெளியில் நெற்பயிர்கள், மூலிகை உதைப்பார் வீட்டினர் அடுத்ததாக ராமநாதபுரம் கிராமத்தில் வாழை, நெல், கரும்பு போன்றவற்றின் பாதிப்புகளை ஆய்வுக் குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போது விவசாயிகள் பயிர்களையும் வாழைத்தார்களையும் மத்திய குழுவிடம் காண்பித்து உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் சேதம் அடைந்து இருப்பதையும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர். புதுச்சேரி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களை பார்வையிட்ட மத்திய குழு, தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் குமார் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புயல் சேத மதிப்பீடு தொகையை மத்திய அரசு மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மத்திய குழுவிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரண தொகை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட தொகை. அதனை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், புயல் மற்றும் மழையால் புதுச்சேரியில் அடிக்கடி பாதிக்கப்படுகிறது, இதற்கு நிரந்தர தீர்வும் பேரிடர் நிதியும் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் அதிகரிக்கும் மூடுபனி - வாகன ஓட்டிகள் அவதி