புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் நான்காம் நாளான இன்று(ஆக.31) சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர், அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக அவரை புதுச்சேரி மருத்துவமனையில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, துணைநிலை ஆளுநர், "சபாநாயகரின் உடல்நிலை சீராக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அழைத்துச் செல்லப்பட உள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரி வளர்ச்சிக்கு தமிழிசை உறுதுணையாக உள்ளார்' - முதலமைச்சர் ரங்கசாமி