புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார். இதையடுத்து, இரு கட்சிகளும் சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவிகளைப் பங்கிட்டுக்கொள்வதில், ஒரு மாதமாக இழுபறி நீடித்துவந்தது.
அமித் ஷா தலையீடு
இரு கட்சிப் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, முதலமைச்சர் ரங்கசாமி, ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்புகொண்டு பேசினார்.
அதையடுத்து, பதவி பங்கீட்டில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது. அதில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பாஜகவுக்கு சபாநாயகர், இரண்டு அமைச்சர் பதவியும் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.
பாஜகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு பேர், நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர், சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் ஆகியோரின் ஆதரவு உள்ளது. இவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி கொடுப்பது என்பது தொடர்பாக, கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் இரு நாள்களாக ஆலோசித்து முடிவுசெய்தனர்.
உடன்பாடு இல்லை
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக பொறுப்பாளர் அவரது வீட்டில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜக மேலிடம் கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சரைச் சந்தித்து கூறியதாகவும், இதுவரை அமைச்சர்கள் பட்டியல் வழங்கவில்லை எனவும் பாஜக தெரிவித்துள்ளது.
ஆதலால் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியேற்பதில் இழுபறி நீடித்துவருகிறது.