புதுச்சேரி: பாகூர் கிருமாம்பாக்கத்தை அடுத்த மூர்த்திகுப்பம் புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று காலை ஒரு குழந் தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், ஏட்டு பிரீமியர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே நாடோடி பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன் (32), அவரின் 2-வது மனைவி சங்கீதா (24) ஆகியோர் தங்கள் குழந்தையை காணவில்லை என தேடி கொண்டிருந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மணலில் புதைத்து இறந்து கிடந்த குழந்தை அவர்களுடையது என தெரிந்து கதறி அழுதனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரித்த போது, குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளதாகவும், இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். சமுதாய நலக்கூடம் அருகே சில நாட்கள் வசித்துள்ளனர். பின்னர் குளக்கரைக்கு அருகில் வந்து வசித்து வந்ததாக தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
நேற்றைய தினம் குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் குழந்தை புதைக்கப்பட்டிருந்ததால் போலீசாருக்கு குமரேசன், சங்கீதா தம்பதியர் மீது சந்தேகம் வலுத்தது. இதனால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். போலீசாருன் கிடுக்குபிடி விசாரணையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் சங்கீதா குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் தம்பதியர் இருவரும் மதுபோதையில் இருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவர் திட்டியதால் மனம் உடைந்த சங்கீதா குடிபோதையில் கணவன் தூங்கிய பிறகு அதிகாலை 3.30 மணி அளவில் குழந்தையை உயிரோடு புதைத்ததாகவும், மேலோட்டமாக புதைத்ததால் நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சங்கீதா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தம்பதியிடம் ரூ.60 லட்சம் வழிப்பறி.. 4 இளைஞர்களை அலேக்கா அள்ளிய போலீஸ்!