புதுச்சேரி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பு வகிக்கும் துறைகளில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாத நிலையில், எதற்காக அவர் அமைச்சராக தொடர வேண்டும் என்றும், 99 சதவிகித கஞ்சா விற்பனையை ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் தான் செய்கிறார்கள் எனவும் எம்.பி வைத்திலிங்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி கூறுகையில், "புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு நோய் அதிகளவில் பரவி வருகிறது. உயிர் கொல்லி நோயான இதனை தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் டெங்கு அதிக அளவில் பரவி வருகிறது. இதை தடுக்காமல் சுகாதாரத்துறை வேடிக்கைப் பார்த்து வருகிறது. சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு மருத்துவமனையில் என்ன வசதி உள்ளது என்று கூட தெரியவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் மக்கள் நலன் கருதி சுகாதாரத்துறை அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் கால்நடைத்துறைகள் மூலம் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. எனவே சரியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது. மின்துறையை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு, உண்மையை மக்களுக்கு சொல்லாமல் ஆட்சியாளர்கள் மூடி மறைக்கின்றனர். மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
அதிகாரம் வேண்டும் என்று தான் இருக்கிறார்கள். கல்வித்துறை, மின்துறை, தொழில்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் இல்லை. இந்த துறைகளை கவனிக்கும் அமைச்சர் நமச்சிவாயம் எந்த ஒரு மக்கள் பணியையும் செய்வதில்லை. அப்படியென்றால் அவருக்கு அமைச்சர் பதவி எதற்கு. பதவியை விட்டுவிட்டு வெளியே வந்து விட வேண்டியது தானே. முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சரை முடுக்கிவிட வேண்டும்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கேன்சர் (Cancer) போன்று போதைப் பொருள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளுக்கு காவல்துறையும், அமைச்சர்களும் ஆதரவாக இருக்கிறார்கள். 99 சதவீத கஞ்சா விற்பனையை
ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் தான் செய்கிறார்கள்.
மக்கள் பாதிக்கப்படும்போது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய காவல்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களுமே கஞ்சா விற்பனைக்கு முழு காரணம்" என்று எம்.பி வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் உல்லாசமாக சுற்றி திரியும் நாய்கள்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்!