புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வழங்கியுள்ள ஒப்புதல்கள் குறித்து ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ”புதுச்சேரி காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக IRBn காவலர்களுக்கு சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர், சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
2021-22ஆம் கல்வியாண்டு முதல் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 60 இடங்கள் கொண்ட இளங்கலை (பி.ஏ. ஆங்கிலம்) பட்டப் படிப்பை புதிதாகத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பில் கூடுதலாக 64 இடங்களுடன் மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்க அனுமதி வழங்கப்படுகிறது.
2020-21ஆம் நிதியாண்டில், மத்திய அரசின் 'குழந்தைகள் பாதுகாப்புச் சேவை' திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக புதுச்சேரி மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்துக்கு முதல் தவணையாக 1.29 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. ராஜாவை புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் பிரதமர் குறு-உணவு பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக புதுச்சேரி PIPDIC நிறுவனத்துக்கு 1.45 கோடி ரூபாய் நிதி கொடை வழங்க ஒப்புதல் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி பாகூர் கொம்யூன் பகுதியை அக்டோபர் 2ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்பாட்டு நெகிழி (SUP) இல்லாத பகுதியாக அறிவிக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி - 'ஜெய் பீம்' சூர்யா