தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் யாரும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும், அரசாங்கம் மூலமாக மருந்து வழங்கப்படுகிறது.
தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தைப் பரிந்துரை செய்பவர்கள் மீது மருத்துவத் துறையின் மூலம் கண்காணிப்பும், நடவடிக்கைகளும் எடுக்க நேரிடும். கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள், கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சையளிக்க வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கிவரச் சொல்லி அலைக்கழிக்கக்கூடாது.
மேலும் அரசாங்கம் மூலமாக வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முறையான நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பதை மருத்துவத் தணிக்கைக்குழு மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.