புதுச்சேரி: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கத்தின் 116ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், இன்று(ஜூன். 27) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, 116 பெண் சலவைத் தொழிலாளர்களுக்கு புகையில்லா சலவைப்பெட்டிகளை வழங்கினார்.
அப்போது துணைநிலை ஆளுநர் கூறியதாவது," பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சேவை நிகழ்ச்சி என்பதால் பல முக்கிய அலுவல்களுக்கு இடையிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
அரசு விழாக்களுக்கு ஈடாக சேவை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து கலந்து கொண்டேன். முந்தைய காலத்தில், நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்தை சாமானிய மக்களிடம் கொண்டு சென்றதில் ரோட்டரி சங்கத்திற்கு பெரும்பங்கு உண்டு.
அதைப்போலவே, தற்போதைய கரோனா பெருந்தொற்றுச் சூழலில் கரோனா தடுப்பூசியையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ரோட்டரி பங்கு அதிகம் இருக்க வேண்டும்.
சங்க நிர்வாகிகள் களத்தில் இறங்கி மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வுடன் பங்காற்ற வேண்டும். புதுச்சேரி, கலாச்சார ஆன்மீக சூழல்களைக் கொண்டது.
புதுச்சேரி பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் இந்த மாநிலம் சாதனை படைக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால், பெண்கள் அனைவரும் ஊசி போட்டுக் கொள்ளுங்கள்.
தேர்தலில் ஓட்டு போட்டது போலவே தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுங்கள். இங்கே, அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கரோனா தொற்று நடைமுறைகளைப் பின்பற்றி, அதனைக் ஒழிக்க நாம் இணைந்து செயல்படுவோம்" என்றார்
இதையும் படிங்க: இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்!