புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மிகவும் பழமையான கோயில், காமாட்சியம்மன் கோவில். இந்த கோயிலுக்குச் சொந்தமாக ரெயின்போ நகர் மற்றும் அன்னை நகர் பகுதியில் சுமார் 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் இருந்திருக்கிறது. சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து விட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு புகார் வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஜிபி எஸ்பி மோகன்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், 31 ஆயிரத்து 204 சதுர அடி நிலத்தை சென்னையைச் சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகன சுந்தரி, மனோகரன், புதுச்சேரியைச் சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து, பத்திரப்பதிவு செய்து மனைகளாகப் பிரித்து விற்றது தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த மனைகளில் சிலவற்றை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட் வாங்கியதாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவகாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உள்பட 17 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்து மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுப்பிரமணியம், கோயில் நிலத்தை மனைப்பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அது மட்டுமின்றி, அங்கு மனை வாங்கியுள்ள அனைவரின் கிரயப் பத்திரத்தையும் ரத்து செய்து, சொத்தை கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, சிபிசிஐடி போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், கோயில் சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட அவர், இதனை 6 வாரக் காலத்திற்குள் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இதற்கான பணியை அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ள நிலையில், அபகரிக்கப்பட்ட நிலத்திற்கான உரிமையை கோயில் நிர்வாகத்திடம் வழங்க மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், கோயில் நிலம் வீட்டு மனைகளாக்கி விற்ற பத்திரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கோயில் நிலத்தை மீண்டும் காமாட்சியம்மன் கோயில் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை ஆட்சியர் கந்தசாமி தலைமையில் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயில் நிர்வாகக் குழுவிடம் நிலத்தை முறைப்படி ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?