புதுச்சேரி: சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புதுச்சேரியிலிருந்து கிளம்பிய அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தான் சென்ற வழியில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்தக் காயத்துடன் இருப்பதைக் கண்டுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி அளித்து, தன்னுடன் பாதுகாப்பு வாகனத்தில் வந்த காவலர் ஒருவருடன் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவரைத் தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
விபத்துக்குள்ளான இளைஞருக்கு ரத்தக் கசிவு நின்று நலமுடன் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, ”வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, வாகனம் ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும்” என்றார்.