புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் இன்று (நவ.20) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "உயர்சாதியிலுள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடக்கும். புதுச்சேரியில் உள்ள மத சார்பற்ற அணி தரப்பில் அனைவரும் இணைந்து விவாதித்து நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மக்களுக்கு வலி இல்லாமல் வரி உயர்வு தாக்கல் செய்யப்படும். தற்போது வியாபாரிகளும் மக்களும் விலைவாசி உயர்வால் கடும் பாதிப்பில் உள்ளனர். தற்போது வரி உயர்த்துவது, வலி இல்லாமல் விஷ ஊசி போடுவது போன்றது. கூட்டுறவு நிறுவனங்கள் மூடுவதற்கு ஊழியர்கள்தான் காரணம்.
புதுச்சேரி கூட்டுறவு நிறுவனங்களில் கொள்ளைப்புறமாக ஆட்களை நியமித்தது, 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர்களை பாண்லேவில் மேலாளர், துணை மேலாளர் பதவிக்கு அமர்த்தியது ஆகியவையே காரணம். கூட்டுறவு நிறுவனங்கள் பாழானதற்கு முதலமைச்சர் ரங்கசாமிதான் காரணம். நிர்வாக கோளாறு, ஊழல் ஆகிறவற்றுக்கும் ரங்கசாமி தான் காரணம். கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்ததற்கு அவரே முழுக்காரணம்' என்றார்.
மேலும் அவர், 'உள்ளாட்சித்துறை, தற்போது 19 ஆண்டுகளுக்கு குப்பை அள்ளுவதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.220 கோடி மொத்தமாக வழங்கவேண்டி வரும். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இவ்வளவு அதிக காலத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது கிடையாது. குறைந்தபட்சம 5 முதல் 7 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படும். இதில், மிக பெரிய ஊழல் அரங்கேறும். இதற்கு பின்னனியில் முதலமைச்சர் அலுவலகம் உள்ளது. எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
அத்துடன், 'ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையை திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கொண்டாடுவது மனவருத்தத்தை அளிக்கிறது. திமுக ஆதரவு தருவது நிர்பந்தமே தவிர கட்சியின் கொள்கை கிடையாது. சென்னையில் போலீசார் பறிமுதல் செய்த வெடிகுண்டு புதுச்சேரியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இவ்வாறு புதுச்சேரியில் இருந்து பல மாநிலங்களுக்கு வெடிகுண்டுகள் கடத்தப்படுகிறது. இதற்கு புதுச்சேரி போலீசார் முதுகெலும்பு இல்லாமல் செயல்படுகிறார்கள்' எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் குறிப்பாக, 'ராஜீவ்காந்தி கொலை வழக்கில் டெல்லி சென்று எங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்ய முடியுமா? என விசாரித்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவள்;என் மீதான பழியிலிருந்து மீள வேண்டும்: நளினி