புதுச்சேரி: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் குழு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூலை 7) அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு, சைக்கிள் ஓட்டி வந்து முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
நாராயணசாமியுடன், மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், இதர கட்சி நிர்வாகிகள் வந்து பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பெட்ரோல் நிலையத்தில், பொதுமக்களிடம் ஒன்றிய அரசுக்கு எதிராக, கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் கையொப்பமும் பெற்றனர்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு ரூபாய்க்குக் கண்டனம் தெரிவித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்டை வண்டியில் மக்களவை சென்ற நிகழ்வு நிகழ்ந்தது. ஆனால் தற்போது ஒரே மாதத்தில் 16 முறை உயர்வு நடைபெற்றுள்ளது.
இதனைக் குறைக்கும் வகையில் இன்று (ஜூலை 7) முதல் வரும் 17ஆம் தேதிவரை தொடர் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. தற்போதைய துணை நிலை ஆளுநர் காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் இப்போது அவர் என்ன பதில் கூறுவார்” என்று வினா எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் புதிய தலைவராக லியோனி நியமனம்!