புதுச்சேரியில் மின் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து நாளை (ஜன.11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய மின் துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த ஆண்டு மே மாதம் முதலாகவே மின்துறையைத் தனியார்மயமாக மாற்றக்கூடாது என புதுச்சேரி மின்துறை தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மின்துறை தனியார்மயமாக மாற்றக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர். அரசின் தீர்மானத்தை மீறி தனிநபராக மின் துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பினார்.
இதையடுத்து கடந்த நவம்பர் 23ஆம் தேதி புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து மின் துறை தலைமை அலுவலகத்தில் நாளை 11ஆம் தேதி காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் சிரமத்திற்கு பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்சாரம் தனியார் மயம் - தன்னிச்சையான முடிவு என நாராயணசாமி குற்றச்சாட்டு!