புதுச்சேரி: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையின் போது, மோடி என்றப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், நாடெங்கும் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் காங்கிரஸ் கட்சி போராடும் என அக்கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி பதவி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். மத்திய அரசை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து உள்ளதாக மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி விவகாரம் - பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்!
இளைஞர் காங்கிரஸ் கல்யாணசுந்தரம் தலைமையில் "இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம்" என்ற தலைப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள், புதுச்சேரி காமராஜர் சிலையின் கீழ் வாயில் கருப்பு துணி கட்டியபடி அமர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் சங்கர், ராகுல்காந்தி தேசிய பேரவையின் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை மட்டும் எம்பி பதவி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் நடத்திய இந்த நூதன போராட்டத்தின் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மோடி கருத்து விவகாரம் - பாட்னா நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணை - ராகுலை துரத்தும் வழக்குகள்?