புதுச்சேரி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு நிதி வழங்கியது சம்பந்தமாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் இன்று (ஜூன் 13) ராகுல்காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியிலும் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பழிவாங்கும் நோக்கில் மீண்டும் விசாரணை: போராட்டக்காரர்கள் வருமானவரித் துறை அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயன்றதால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, " சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் மோடி அரசு மீண்டும் விசாரணை மேற்கொள்வது காழ்புணர்ச்சியை காட்டுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாகவும் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவல் துறையினர் பிடித்து தள்ளியதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு