புதுச்சேரி: புதுச்சேரியில் மழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்வதற்காக மத்திய உள் துறை அமைச்சக இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையிலான நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர் புதுச்சேரி வந்தனர்.
இதனையடுத்து அக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசுத் துறை அலுவலர்களுடன் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இக்குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசையை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மத்திய குழுவினர், இன்று (நவம்பர் 23) காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மேலும் நிவாரணம் கேட்கப்படும்
மத்திய குழுவினருடன் ஆலோசனைக்குப் பின்பு ரங்கசாமி செய்தியாளரைச் சந்தித்தார், புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 7 ஆயிரம் ஏக்கர் பயிர்நிலங்கள் பாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு வீடுகள் சேதம் அடைந்ததாகவும் கூறினார்.
மழை சேதம் குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும், மத்திய அரசிடம் 300 கோடி இடைக்கால நிவாரணம் கேட்டுள்ளதாகவும், மத்திய குழுவினர் ஆய்வுசெய்த பின்பு மேலும் நிவாரணம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.