புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் அது நிறைவேற்றப்பட்டது.
அதை நடைமுறைப்படுத்த பல தடங்கல்கள் இருக்கிறது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு புகார் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. இதுகுறித்து புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டபின்பு படிப்படியாக அமல்படுத்தப்படும் எனப் பேரவையில் முடிவெடுக்கப்பட்டது.
புதுச்சேரியில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்நிலையில் மோட்டார் வாகனச் சட்டம் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்புதான் அதை நடைமுறைப்படுத்தவேண்டும் என உத்தரவிட்ட நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அலுவலர்களை மிரட்டி ஹெல்மெட் போடாமல் செல்பவர்களை பிடித்து அதிகளவு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளதால், அலுவலர்கள் பொதுமக்கள் வாகனங்களைப் பிடிக்கிறார்கள். இது அராஜக செயல்.
மற்ற மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டங்களை அமல்படுத்தினாலும் கெடுபிடிகள் இல்லை. ஆனால், புதுச்சேரி மாநில மக்களுக்கு தொல்லை கொடுக்கவேண்டும் என்பதற்காகவே அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். புதிய போக்குவரத்துச் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும், மாறாக மக்களைத் துன்புறுத்தக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: உண்மைக்கு புறம்பாக பேசக்கூடாது, ஜெபி நட்டா குற்றச்சாட்டுக்கு நாராயணசாமி பதில்