தேர்தல் நெருங்கிவரும் வேளையில் என்ன நடக்கிறது புதுச்சேரியில்? விவரங்களை அறிய நேரடியாகக் களத்தில் இறங்கியது ஈடிவி பாரத்.
தீவிரம் காட்டும் பாஜக, தொய்வு நிலையில் காங்கிரஸ்!
உள்கட்சிப் பிரச்சினை, தலைமை மீதான அதிருப்தி, தொண்டர்களை உற்சாகமாக வழிநடத்தத் தவறியது என்ற குறைகளுக்கு நடுவே தேர்தலை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தங்கள் கட்சியில் இணைந்தவர்களுடனும், மாநிலத்தில் தங்களுக்கான ஆதரவு குறைவாக இருப்பதை அறிந்து வெளி மாநிலத்திலிருந்து ஆள்களை இறக்கியும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் பாஜக என இரு தேசியக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
'விலை போகும் எம்எல்ஏக்கள்'
ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்தவரும், நாராயணசாமி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியவருமான மல்லாடி கிருஷ்ணராவ், அண்மையில் காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியை ஏனாம் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதுடன் அவருக்கு ஆதரவாக பரப்புரைகளையும் மேற்கொண்டுவருகிறார்.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதன் மூலம் வெற்றியையும் விலைக்கு வாங்க நினைக்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஐந்து எம்எல்ஏக்களில் நான்கு பேருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
"பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில், பாஜக முகத்தைப் பிரதிபலிக்கும் வேட்பாளராக ஒருவரும் இல்லை. அனைவருமே காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்றவர்கள்தான். புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் இங்கு கவனத்தைச் செலுத்தி வெற்றிபெறலாம் என்ற முனைப்புடன் பாஜக உள்ளது" எனக் கூறுகிறார் அரசியல் விமர்சகரான ஜோசப் விக்டர் ராஜ்.
அதிமுகவின் சமரசம்
கடந்த தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்ற அதிமுக தற்போது, பாஜகவுடனான தொகுதிப் பங்கீட்டில் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. அதேநேரத்தில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கூட இல்லாத பாஜக, ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுவதுடன், அடுத்து நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் எனவும் கூறிவருகிறது.
கட்டாய கூட்டணி
புதுச்சேரியில் வலுவான கட்சியான என்.ஆர். காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 19 தொகுதிகளில் போட்டியிட்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளிலாவது என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கென தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதால், அக்கட்சி வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிடுகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் பார்வையாளர்கள், பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியை ஒரு கட்டாயக் கூட்டணி என்றே கூறுகின்றனர்.
வாக்காளர்களைக் கவர்ந்த ரங்கசாமி
நாம் நேரில் காணச்சென்றபோது, இறை நம்பிக்கை அதிகம் கொண்ட ரங்கசாமியை, அவரது ஆதரவாளர்கள் மத குருவைப் போல வணங்குகிறார்கள். கடந்த காலங்களில் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற உதவிகளைச் செய்துள்ளதால் அவரைக் காண மக்கள் கூடுவதாக கூறுகிறார்கள் அக்கட்சியினர்.
பொதுவாக வாக்காளர் மத்தியில் ரங்கசாமி மிகவும் பிரபலமானவராக இருக்கிறார். எளிமையாகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் இருப்பதால் அவர் மக்களால் விரும்பப்படும் அரசியல் தலைவராக வலம்வருவதாகப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். தெருவோர பழ வியாபாரி ஒருவர், கட்சியெல்லாம் நமக்கு தெரியாதுப்பா ஆனா, புதுச்சேரியோட அடுத்த முதலமைச்சர் ரங்கசாமிதான் என்கிறார் சற்றும் சிந்திக்காமல்.
கூட்டணி சிக்கல்
ரங்கசாமி தனித்துப் போட்டியிட்டால் எளிதாக வெற்றிபெறுவார் என புதுச்சேரி பத்திரிகையாளர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். புதுவையைச் சேர்ந்த வாக்காளரான பச்சையப்பனும் இதே கருத்தையே எதிரொலிக்கிறார்.
"படித்த இளைஞர்கள் பலரும், புதுச்சேரிக்கு பாஜக ஏதும் செய்யவில்லை எனக் கருதுகின்றனர். மேலும், விலைவாசி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கிரண்பேடி விவகாரம் உள்ளிட்டவை பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கலாம். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு நாராயணசாமி அரசு கலைக்கப்பட்டதால், மக்கள் அவர் மீது அனுதாபம் கொண்டுள்ளனர். இது ரங்கசாமிக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது" என்றும் தெரிவித்தார் பச்சையப்பன்.