புதுச்சேரி ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜெயந்தி. இவருக்கு ஃபேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த எரிக் வால்க்கர் என்பவர் பழக்கமானார். அவர் தன்னை மருத்துவர் என்று ஜெயந்தியிடம் அறிமுகம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் இருவரும் செல்ஃபோன் எண்களை பரிமாறிக்கொண்டு நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் ஜெயந்தியின் மகள் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருள் அனுப்புவதாக ஜெயந்தியிடம் அந்த நபர் கூறினார்.
மேலும் அந்தப் பரிசுப்பொருளை செல்ஃபோனில் படம் பிடித்து ஜெயந்திக்கும் அவர் அனுப்பி வைத்தார். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி ஜெயிந்தியின் செல்ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய பெண், தான் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு இங்கிலாந்திலிருந்து பரிசு பொருள் வந்துள்ளது, அதைப் பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பி தனது வங்கி கணக்கில் இருந்து 13 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை ஜெயந்தி, மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த பரிசுப் பொருளும் இதுவரை வந்து சேரவில்லை.
அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயிநதி, இது பற்றி உடனடியாக, புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் டெல்லியில் வசித்து வரும் நைஜீரிய நாட்டை சேர்ந்த செண்ணனா பேவர் மற்றும் ஆனகா அந்தோணி ஆகியோர் பரிசு பொருள் அனுப்புவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் தனிப்படை காவலர்கள் டெல்லி சென்று அந்த இரண்டு நபர்களை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அதன் பின் அவர்களை காவலர்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய புதுச்சேரி சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பாலியல் தொல்லை: கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை!