புதுச்சேரி: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நான்கு நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவித்து வருகின்றன. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய மற்றும் மாநில அரசிடம் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றன.
அந்த வகையில், உக்ரைனில் சிக்கிக் கொண்ட, புதுச்சேரி மாணவர்களின் பெற்றோர்கள், புதுச்சேரி அரசுடன் தொடர்பு கொண்டு தங்கள் பிள்ளைகளை மீட்க கோரிக்கை வைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாநில அரசு, மத்திய அரசிடம் புதுச்சேரி மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் அழைத்து வருவதற்கான செலவினை, முழுமையாக புதுச்சேரி அரசு ஏற்கும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே கார்கீவ் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதால் புதுச்சேரி மாணவர்கள் மிகவும் பதற்றம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்த தகவலை, நேற்று (பிப். 28) சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில், முதலமைச்சரை சந்தித்து, மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அப்போது, மாணவர்களின் பதட்டத்தை போக்கும் வகையில், முதலமைச்சர் ரங்கசாமி வீடியோ கால் மூலம் மாணவர்களுடன் பேசி ஆறுதல் தெரிவித்தார். மேலும், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசப்படும் என்றும், பார்த்து பத்திரமாக இருங்கள் என்றும் கடவுள் இருக்கின்றார் சீக்கிரம் அழைத்து வருகிறோம் என்றும் ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் வால்பாறை மாணவியை மீட்க பெற்றோர் கோரிக்கை