புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்கள் டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி செயல்படுகிறார் என்றும், அவர் மீது பிரதமர், குடியரசு தலைவரிடம் புகாரளிக்க உள்ளதாகவும், இதற்காக அமைச்சர்களுடன் டெல்லி செல்லவுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி முன்னதாக தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், ஷாஜகான், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் நேற்று (ஜனவரி 20) டெல்லி விரைந்தனர்.
இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து மத்திய மின் துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து மின் துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலப்பணி திட்ட கோப்புகளுக்கு கையொப்பம் இடாமலும், சமூக நலத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் கந்தசாமி போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் நாராயணசாமியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
நேற்றைய அமைச்சர்கள் டெல்லி பயணத்தின்போது, பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மட்டும் டெல்லிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.