புதுச்சேரி: ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேசிய ரத்த தான விழா அரசுத் தரப்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரி கதிர்காமம் பகுதியிலுள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் தேசிய ரத்த தான விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி கதிர்காமம் தொகுதியின் என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு, 2019 முதல் 2021ஆம் ஆண்டுவரை, இரண்டு முதல் எட்டு முறை ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய ரங்கசாமி, "புதுச்சேரி 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற வேண்டும். எனவே, அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும். தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனை விரைவில் கட்டப்படும். இதற்கு ஒன்றிய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது.
கரோனா காலங்களில், இந்த மருத்துவக் கல்லூரி சிறந்த முறையில் சேவையாற்றிவருகிறது. இங்கு விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு!