புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிவடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று (மே.17) வீடு திரும்புகிறார்.
பின்னர் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு வாரம் தன்னை திலாசுபேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். வீட்டில் தனிமையில் இருந்தபடியே அரசு அலுவலர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார் என தெரியவந்துள்ளது.
கூட்டணி கட்சியான பாஜக நியமித்த நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், புதிய அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு, எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கட்சி எம்எல்ஏக்களுடன் அவர் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்
மூன்று நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் பாஜக என்ஆர் காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், புதுச்சேரியில் ஆகஸ்ட் மாதம் காலியாகும் மாநிலங்களவை எம்பி சீட் தங்களுக்கு வேண்டுமென்ற ரங்கசாமியின் கோரிக்கையை பாஜக ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அலட்சியமாக நடந்துகொள்ளும் மத்திய அரசு - வல்லுநர் குழுவிலிருந்து விலகிய மூத்த வைராலஜிஸ்ட்!