புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வெற்றிபெற்றால் இங்குள்ள அதிகாரங்கள் அனைத்தும் குறைந்து நகராட்சியாகிவிடும் என்று திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.
புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்பி திருச்சி சிவா பரப்புரை மேற்கொண்டுவருகிறார். வில்லியனூர் தொகுதியில் போட்டியிடும் சட்டப்பேரவை உறுப்பினர் சிவாவை ஆதரித்து அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரி மக்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை விடுக்கிறேன். இந்தியாவில் புதுச்சேரி, டெல்லி மட்டுமே சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசங்களாக இருக்கின்றன.
புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் மாநிலத் தகுதி பெறாது. அவர்கள் இந்த நகரை நகராட்சியாக மாற்றிவிடுவார்கள். இதற்கு உதாரணம் டெல்லி.
அங்குள்ள அரசின் அதிகாரத்தைக் குறைத்து துணைநிலை ஆளுநருக்கு அதிகாரத்தைக் கூட்டி சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர். இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராடிவருகிறோம். இந்த நிலை புதுச்சேரிக்கும் வரக்கூடாது என்றால் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் நீட் ரத்துசெய்யப்படும். உணவு உற்பத்தியில் இந்தியா தன்நிறைவுப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உழவர்கள். இந்த உழவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: 'துக்கடா அரசியவாதி' என விமர்சனம் - மநீம பதில் அளிக்குமாறு வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்