தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கோட்டையாக திகழும் புதுச்சேரியில் ஆட்சி அரியணையில் அமர பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், பல்வேறு கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சியில் இணைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களுடன் பாஜக தரப்பு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், மூத்த அமைச்சரான நமச்சிவாயம் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேரும் பாஜகாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு நாள்களாக அமைச்சர் நமச்சிவாயம், தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே பாஜக தேசிய தலைவர் நட்டா ஜனவரி 31ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அப்போது, அவர் முன்னிலையில் பாஜகவில் நமச்சிவாயம் இணைவார் எனக் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக அவர் தனது எம்எல்ஏ பதவி, அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யவும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகவும் திட்டமிட்டுள்ளார் . இவர் வரும் 27ஆம் தேதி டெல்லியில் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.