டெல்லி: உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உட்படப் பல நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று (ஜனவரி 18) தெரிவித்துள்ளார். இதன் படி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மதியம் 2.30 வரை மூடப்படும். இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அன்று அரை நாள் விடுமுறை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்விற்காக சில மாநிலங்கள் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்விற்காக மாநிலங்கள் சில ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. அதே போல் ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை இந்திய மக்கள் தீபாவளி போல் கொண்டாட வேண்டும் எனவும் அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றும் படியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமர் கோயில் கும்பாபிஷேகம்: ஜன.22 மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை..!