புதுச்சேரி: நகரப் பகுதியான லால்பகதூர் சாஸ்திரி வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பள்ளியின் அருகில் புதிதாக மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பெண்கள் பள்ளிக்கு அருகில் மதுபான கடைகள் இருப்பதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதனை அங்கிருந்து அகற்றக்கோரியும் பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடையின் கதவை இழுத்து மூடி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குவந்த காவல் துறையினர் இது குறித்து கலால் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
மேலும் ஒரு சில தினங்களுக்குள் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால் மதுபான கடைகளை சூறையாடுவோம் எனவும் எச்சரித்தனர்.