மேற்குவங்கம்: பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்லாமிய நாடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நூபுர் சர்மா பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேநேரம் அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் நூபுர் சர்மா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நூபுர் சர்மாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி இன்று(ஜூன் 20) விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், ஆஜராக 4 வாரங்கள் கால அவகாசம் கோரி நூபுர் சர்மா போலீசாருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் குறித்து போலீசார் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை.