ராஞ்சி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
இதனிடையே டெல்லியை சேர்ந்த பாஜக நிர்வாகி நவீன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நூபர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், நபிகள் நாயகத்து எதிராகவும் கருத்து தெரிவித்தார்.
இதற்கும் மிகுந்த எதிர்ப்பு கிளம்பியதால், பதிவை அவர் நீக்கிவிட்டார். இதனால் நூபர் சர்மா, நவீன் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதாக பாஜக அறிவித்தது. இத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் நுபுர் சர்மா, நவீன் இருவரையும் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று (ஜூன் 10) பேராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில வன்முறையாளர்கள் கல் வீச்சு, சாலை மறியல், வாகனங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசார் தரப்பில் தடியடி, புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது.
இதன் காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்படி சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இருவர் இன்று (ஜூன் 11) உயிரிழந்தனர். ராஞ்சியில் இன்று காலை 6 மணி வரை இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி ஜமா மசூதியில் ஆர்ப்பாட்டம்!