சத்தீஸ்கர்: தெலங்கானா, மத்திரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்று சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘நகரிய நிகாய் ஏவம் பஞ்சாயத்து ராஜ் மகாசம்லென்’ என்னும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா பங்கேற்று பேசினார். அப்போது அவர், “சத்தீஸ்கரில் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்.
மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசைத் தாக்கி பேசிய அவர், பாஜக தலைமையிலான அரசு பணக்காரர்களுக்கானது என்றும், அவர்களுக்கு ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் மீது அக்கறை இல்லை என்றும் தெரிவித்தார். சத்தீஸ்கரின் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரியான மக்கள்த்தொகை கணக்கெடுப்பு போல் சத்தீஸ்கரிலும் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
மேலும், சத்தீஸ்கரில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பது சம்பந்தமாக முதலமைச்சர் பூபேஷ் பாகேலிடம் பேசியுள்ளதாகம் தெரிவித்த அவர், பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் அம்மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையில் 84 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சியின் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் 45 சதவிதம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) தங்கள் பக்கம் இழுப்பதற்கான முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம், கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடியின் வாக்குறுதிகள் என்ன ஆனது? பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் எனவும் விமர்சித்தார்.
பாஜக தலைமையிலான அரசு நாட்டில் விவசாயிகளை நலிவடையச் செய்துள்ளது. நாட்டில் விவசாயிகள் நாள் ஒன்றுக்கு ரூ.27 மட்டுமே சம்பாதிக்கிறார்கள். அதே நேரத்தில் அதானி மற்றும் பிற தொழிலதிபர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1600 கோடி வரை சம்பாதிக்கிறார்கள். பாஜகவினர் நாட்டின் சொத்துக்களை அவர்களின் பணக்கார நண்பர்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் மூலம் கட்சிக்கு பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று விரும்பிகிறார்கள். ஆட்சியில் இருக்க வேண்டும் என்னும் அவர்களின் நோக்கம் மக்களுக்கானது அல்ல.
பிரதமர் தலா 800 கோடி ரூபாய்க்கு இரண்டு விமானங்களை வாங்கியதாகவும், நாடாளுமன்ற கட்டடத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்ததாகவும், சர்வதேச மாநாடு வளாகத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் போது பணம் இல்லை என்று கூறுகின்றார். தொழிலதிபர் நண்பர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இருக்கின்றது, குடிமக்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை.
பாஜக அரசு மக்களைத் தவறாக நடத்துகிறது. அவர்களின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது தான் மக்களின் நலன் அல்ல. இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பிற்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், அதனால் அவர்களுக்குள் நல்ல உறவு இருந்ததாகவும், பூபேஷ் பாகேல் அரசாங்கமும் அதையே முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்டிருந்த மாநிலத்தை வன்முறையின் பிடியில் இருந்து காங்கிரஸ் தான் மீட்டெடுத்தது. ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பூபேஷ் பாகேலின் தலைமையிலான அரசு பாடுபட்டுள்ளது. பஞ்சாயத்து அமைப்புகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலும் பெண்களுக்காக 33 சதவிகித ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது காங்கிரஸ் தான். பாஜக ஆளும் மாநிலங்களில் பஞ்சாயத்துகளின் அதிகாரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு PESA சட்டத்தை செயல்படுத்தி மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் அரசு என்ன செய்துள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சத்தீஸ்கர் மாநில விவசாயிகள் நெல்லுக்கு அதிகபட்ச விலையை அவரால் பெறுவதாக பிரதமர் கூறுகிறார். இது மாநில அரசின் உழைப்பின் பயனை அவர் திருடுவதாகும். பிரமதரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் விவசாயிகள் குவிண்டால் நெல்லுக்கு ரூ.1200 - ரூ.1400 ஏன் பெறுகிறார்கள் என பிரதமரை பார்த்து நான் கேட்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 8 பேர் பலி!