உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வது எப்படி என, 10 ஆலோசனைகள் கொண்ட கடிதத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எழுதியுள்ளார்.
அதில், "யோகி தலைமையிலான அரசு கோவிட்-19 பரிசோதனை குறைத்துவருவது மட்டுமல்லாது, உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கப் பார்க்கிறது. இதற்கு எதிர்கால தலைமுறை உங்களை மன்னிக்காது.
உண்மையை வெளிக்கொண்டுவரும் மக்களை சிறையில் அடைத்து, அவர்களின் உடமையைக் கைப்பற்றுவதை நிறுத்திவிட்டு, முதலில் இந்தத் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுங்கள்.
23 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் கூடுதல் பரிசோதனை நிலையம் அமைத்து பரிசோதனையை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். முறையான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, மருந்துகளை அரசு ஆவன செய்ய வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் முக்கிய அம்சமான தடுப்பூசி திட்டத்தைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஐந்து மாதங்களான நிலையில், இதுவரை ஒரு கோடிக்கும் குறைவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய அம்சமாகும்" என்றார்.