சீதாப்பூர் : மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பிரியங்கா காந்தி மீது சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்கான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் ஆய்வாளர் பிரிஜேஷ் திரிபாதி கூறுகையில், “பிரியங்கா காந்தி, தேவேந்திர ஹூடா, அஜய் குமார் லாலு உள்ளிட்ட 11 பேர் இந்திய தண்டனைச் சட்டம் 107/16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி ஞாயிற்றுக்கிழமை (அக்.3) அங்கு செல்ல முயற்சித்தார். அப்போது லக்னோவில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ள சீதாப்பூர் மாவட்டத்தில் பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்திய காவலர்கள் அவரை கைதுசெய்து வீட்டுச் சிறை வைத்தனர்.
இந்நிலையில் அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சரின் மகன் ஒருவர் காரை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வன்முறை சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : 'விவசாயிகள் மரணம், பிரதமர் மௌனம்'- சிவசேனா!