காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரப் பிரதேச அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ஷாஜஹான்பூரில் ஆஷா பணியாளர்களை உத்தரப் பிரதேச அரசு தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
ஊதிய உயர்வு கேட்டு அங்கு போராடிய ஆஷா தொழிலாளர்களை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாக போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , "ஆஷா சகோதரிகள் மீது நடைபெறும் தக்குதலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமாகும். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அரும் பணியாற்றிய அவர்களுக்கு மரியாதை செய்வதே கடமை.
அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்க வேண்டும். அவர்களின் போராட்டத்தில் நானும் துணை நிற்கிறேன். வரப்போகும் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், மாதம் பத்தாயிரம் ரூபாய் வெகுமானம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில், மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத்தது. சமாஜ்வாதி கட்சி 47 இடங்களையும், பகுஜன் சமாஜ் 19 இடங்களையும், காங்கிரஸ் ஏழு இடங்களையும் வென்றன.
இந்தத் தேர்தலில் காங்கிரசின் முக்கிய முகமாக பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்பட்டுவருகிறார். தேர்தலுக்காக லக்னோவில் பிரியங்கா காந்தி முகாமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தெருவிலிருந்து பத்மஸ்ரீ வரை - ரணங்களை வெற்றியாக்கிய சாதனை திருநங்கை மஞ்சம்மா ஜோகதி