காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் நேற்று (டிசம்பர் 23) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடவுள் ராமர் நேர்மையின் வடிவம். ஆனால், அவருக்கு கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் பெயரில் பாஜக தலைவர்களும், அலுவலர்களும் ஊழல் செய்து லாபம் பார்க்கின்றனர்.
ஏழைகள், பெண்கள் என நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ராமர் கோயில் அறக்கட்டளைக்குத் தங்களால் முடிந்ததை தானமாகக் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் அவர்களின் சேமிப்புதான். ஆனால், மக்களின் பக்தியில் இவர்கள் விளையாடுகின்றனர்.
ஆதாரத்தைக் காட்டிய பிரியங்கா
வாங்க முடியாத பட்டியலினத்தவரின் நிலங்கள் இங்கு அபகரிக்கப்பட்டுள்ளன. குறைந்த விலையுடைய நிலம், அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதிலிருந்தே, மக்களிடமிருந்து பெறப்படும் தானங்களில் ஊழல் நடப்பது பட்டவர்த்தனமாகிறது" என்றார்.
இதற்கு ஆதாரமாக, ஒரு நிலத்தின் விற்பனை ஆவணத்தை பிரியங்கா ஊடகங்களிடம் காட்டினார். அதில், "ராமர் கோயில் கட்டடப்படவுள்ள இடத்திற்கு அருகில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முதலில் எட்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. உடனடியாக, இரண்டாவது முறையாக அதே நிலம் ரூ. 18.5 கோடிக்கு விற்கப்படுகிறது.
அந்த நில விற்பனை ஆவணத்தில் ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களின் கையெழுத்து இருக்கிறது" எனச் சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, இந்த முறைகேடு குறித்து ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய்க்கு தெரிந்துள்ளது என்றார்.
5 நிமிடங்களில் எப்படி இரட்டிப்பாகும்
மேலும், இந்த நில விற்பனைக்கு சாட்சியாக ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், அறக்கட்டளையின் உறுப்பினருமான அனில் மிஸ்ரா, அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் ஆகியோர் இருந்துள்ளனர் என்றும் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நிலம் இரண்டு கோடி ரூபாய் விலையில் ஒருவருக்கு விற்கப்பட்ட நிலையில், அந்த நபர் ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக அதே நிலத்தை ரூ. 18.5 கோடிக்கு விற்கிறார். இதன் பெயர் ஊழலோ அல்லது முறைகேடோ கூட இல்லை என்றால், அப்போது இது என்ன?
தற்போது மாநில அரசு இதை விசாரிக்கக் குழு அமைத்துள்ளது. எப்படி குற்றஞ்சாட்டப்பட்டவர்களே தங்களை விசாரித்துக் கொள்ள முடியும்? எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மாயாவதி மௌனம்
ராமர் கோயில் கட்டுவதற்கு முட்டுக்கட்டைப் போடவே காங்கிரஸ் இப்படி குற்றஞ்சாட்டுகிறது என பாஜக கூறுகிறதே என பிரியங்காவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், பாஜக கொள்ளை அடிப்பதற்குத்தான் நாங்கள் முட்டுக்கட்டை போடுகிறோம் என்று ஒரே போடாகப் போட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் மாயாவதி ஏன் அமைதியாக இருக்கிறார் எனத் தெரியவில்லை எனவும், அகிலேஷ் யாதவ் தேர்தல் சமயத்தில் மட்டும் வாய் திறக்கிறார் என்றும் பிற எதிர்க்கட்சிகள் மீதும் பிரியங்கா சாடத் தவறவில்லை.