போபால் : நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசியம் குறித்து வலியுறுத்திய பிரதமர் மோடி, அனைவருக்குமான அரசியலமைப்பு சமத்துவத்தை கொண்டு இருக்கும் அதேவேளையில் நாடு இரண்டு சட்டகளை கொண்டு இயங்க முடியாது என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் சென்ற பிரதமர் மோடி, கமலாபடி ரயில் நிலையத்தில் மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் 5 வந்தே பாரத் ரயில்கள் சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இஸ்லாம் மத்தத்தில் உள்ள முத்தலாக் குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும் எகிப்து, இந்தோனேஷியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முத்தலாக் என்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாக இருப்பதாக கூறினார். இரண்டு வெவ்வேறு சட்ட விதிமுறைகள் இருந்தால் குடும்பம் செயல்படுமா என்று தெரிவித்த பிரதமர் மோடி அதேபோல் நாடு எப்படிய இயங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலைமைப்பு அனைவருக்குமான சமத்துவத்தை உறுதி செய்வதாகவும் அதில் இரண்டு சட்டங்களை கொண்டு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் சிலர் தங்களது சுயநலத்திற்காக சிலக் குழுக்களை தூண்டு விடுவதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார்.
மேலும், அவர்கள் உண்மையில் இஸ்லாமயர்களுக்கு ஆதரவு இருந்தால், இஸ்லாமிய சகோதரர்கள் ஏழைகளாகவோ அல்லது பின்தங்கியவர்களாகவோ இருந்திருக்க விட்டு இருக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றம் தெரிவித்த போதும் வாக்கு வங்கிக்காக எதிர்க் கட்சிகள் அரசியல் செய்வதாக மோடி கூறினார்.
இஸ்லாமியர்களின் நலனை பாஜக புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுபவர்களை விமர்சித்த பிரதமர் மோடி, உண்மையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருந்தால், அவர்களது குடும்பங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்காது என்றும், அவர்களின் வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இஸ்லாமிய பெண்கள் மீதான ஆதிக்கம் மற்றும் அடக்குமுறையை நிலை நிறுத்த சிலர் முத்தலாக்கை ஆதரிப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் பெண்கள் நீதி மற்றும் சம உரிமைகளுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் தலைமையுடன் தங்களை இணைத்துக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க : 5 வந்தே பாரத் ரயில் சேவைகள்... கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி!