திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கேரளா செல்கிறார். இன்று (செப்டம்பர் 1) மாலை 6 மணிக்கு கொச்சி விமான நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த புனித தலமான காலடி கிராமத்தை பார்வையிடுகிறார். அதன்பின் ரூ.1,059 கோடி மதிப்பீட்டிலான கேரள ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொள்கின்றனர்.
நாளை (செப்டம்பர் 2) காலை 9:30 மணிக்கு கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பணியில் சேர்த்து வைக்க உள்ளார்.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட விக்ராந்த் போர்க்கப்பல், நவீன ரக தானியங்கி அம்சங்களுடன், இந்திய கடல்சார் வரலாற்றில் பிரம்மாண்டமான போர்க்கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நினைவாக அதன் பெயரே இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. 100 எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களின் உபகரணங்களையும், எந்திரங்களையும் விக்ராந்த் போர்க்கப்பல் தன்னகத்தே கொண்டுள்ளது.
விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இயங்கும். அதோடு காலனிய காலத்தில் இருந்து விலகியதைக் குறிக்கும் வகையிலும், பாரம்பரிய இந்திய கடல்சார் கலாச்சாரத்திற்கு இணையாகவும் புதிய கடற்படை கொடியை இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி அறிமுகப்படுத்த உள்ளார்.
இதையும் படிங்க:இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்...