கொச்சி : நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம், கேரளாவுக்கான முதல் வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி கேரளாவில் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கேரளா சென்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று (ஏப். 24) மாலை பிரதமர் மோடி கேரளா வந்தார்.
கேரள பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி வந்தார். கொச்சி கடற்படை தளத்தில் ஊர்வலமாக வந்த பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இரு மருங்கிலும் நின்று கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் காரில் நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 2வது நாளாக திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி கேரள மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து கொச்சி சென்ற பிரதமர் மோடி தெற்கு ஆசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் இந்த திட்டம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரளாவின் கனவுத் திட்டம் என இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டு இருந்தார்.
கொச்சி மாவட்டத்தில் இருந்து செயல்படுத்தப்படும் இந்த வாட்டர் மெட்ரோ 10 தீவுகளை ஒன்றிணைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு முதற்கட்டமாக கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இருந்து மின் மற்றும் பேட்டரியில் இயங்கக் கூடிய 8 கலப்பின கப்பல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
விரைவில் ஒட்டுமொத்தமாக கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் மூலம் 38 முனையங்களில் 78 கப்பல்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக, உயர் நீதிமன்றம் - வைபின் டெர்மினல் மற்றும் வைட்டிலா- காக்கநாடு டெர்மினல் வரையில் கப்பல் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, "கேரளா விழிப்புணர்வு மற்றும் படித்த மக்கள் அதிகம் உள்ள மாநிலம் என்றும் கடின உழைப்பும், பணிவும் கேரள மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்தியில் உள்ள பாஜக அரசு கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்துவதாகவும், மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரம் என்றும் கேரளா வளர்ச்சி அடைந்தால், இந்தியாவும் வேகமாக வளரும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் ரயில் கட்டமைப்பு வேகமாக மாறி வருவதாகவும், அதிக வேகத்திற்கு ஏற்ற வகையில் இந்திய ரயில்வே தயாராகி வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க : நடுவானில் கத்தார் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!