ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் பிறரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டன, நாம் நாட்டின் நிறைவான வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். அதற்காக பாஜகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பாஜக தொண்டர்கள் இந்துக்களில் உள்ள நலிந்த பிரிவினரை மட்டுமல்லாமல், சிறுபான்மையினரையும் சென்றடைந்து அவர்களது ஆதரவை பெற வேண்டும். பல்வேறு தரப்பு மக்களைச் சென்றடைவதன் மூலம் சமூகத்தில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க முடியும். நாடு வாரிசு அரசியல் மற்றும் வாரிசு கட்சிகளால் சோர்வடைந்துள்ளது, அதேநேரம் அக்கட்சிகள் நீண்ட காலம் வாழ்வது கடினம். வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை கேலி செய்ய கூடாது, மாறாக அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சேவை, சமநிலை, கட்டுப்பாடு, ஒருங்கிணைப்பு, நேர்மறை போன்ற குணங்களைக் கொண்ட பாஜக ஊழியர்களைப் பற்றி கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நான் பேசியிருந்தேன். அதையே இப்போதும் வலியுறுத்துகிறேன், பாஜக நிர்வாகிகள் அவ்வாறே இருக்க வேண்டும். நாட்டில் உள்ள எல்லை நலன்களும் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. இந்த தத்துவத்தில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. அதனால்தான் காங்கிரசில் இருந்த பட்டேல் போன்ற தலைவர்களை கொண்டாடுகிறது. அனைத்து பிரதமர்களுக்கும் மரியாதை செலுத்துகிறது.
பாஜக தலைமையிலான அரசாங்கம் அனைவருக்காகவும் உழைத்துள்ளது. நாடு முழுவதும் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது, நாடு வரலாறு காணாத அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. சாதாரண பின்னணியில் இருந்து வந்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு, பாஜக எம்.பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.