டெல்லி : பயங்கரவாதம் குறித்து இரண்டு பேச்சு பேச வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிபை பிரதமர் மோடி சாடினார். பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழப்பு மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாநட்டில் கலந்து கொண்டார்.
காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியிலான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தின் பக்கம் இருக்கும் நாடுகளை கண்டிப்பதாக பாகிஸ்தானை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.
பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிகளை திறப்பது, மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொண்டு இருக்கும் போது, பயங்கவரவாதத்தின் மூலம் எதிர்மறை விளைவுகளை கொண்டு உள்ளதாக பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதம் குறித்து இரண்டு பேச்சு இருக்கக் கூடாது என்றும், தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போரிட வேண்டும் என்று கூறினார். சில நாடுகள் எல்லை தாண்டி தீவிரவாதத்தை நிறுவுவதை கொள்கையாக கொண்டு இருப்பதாகவும், பயங்கரவாதிகளிக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அது போன்ற நாடுகளை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக் கூடாது என்றும் அதனை உறுப்பினர் நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று மோடி தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் தொடர்பான இந்தியாவின் கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பெரும்பாலான உறுப்பினர் நாடுகளைப் போலவே உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக ஒன்றுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அண்டை நாடுகளில் அமைதியின்மையை பரப்பவோ, தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கவோ ஆப்கானிஸ்தான் நிலம் பயன்படுத்தப்படாமல் இருப்பது முக்கியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவது, தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷாப்ஸ் ஷெரிப் வேறுவழியின்றி அமைதியாக பிரதமர் மோடியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு ஒத்திசைத்தவாறு பேசிய ரஷ்ய அதிபர் புதின், பயங்கரவாத மற்றும் தீவிரவாத எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : "பயங்கரவாதத்திற்கு நிதியுதவியை நிறுத்துங்கள்" - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பேச்சு!