வாஷிங்டன் : பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வரும் ஜூன் 22 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து அளிக்கின்றனர். இது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் இந்த பயணம், அமெரிக்கா - இந்தியா இடையேயான ஆழமான மற்றும் நெருக்கமான கூட்டாண்மை மற்றும் அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் பிணைப்புகளை உறுதிப்படுத்தும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த பயணம் இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும் என்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்து உள்ளார். மேலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, விஞ்ஞானம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்படுத்த இந்த பயணம் உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு, எரிசக்தி, உள்ளிட்ட துறைகள் சார்ந்த முக்கிய தீர்மானங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இரு நாடுகளின் கல்விப் பரிமாற்றம், கால நிலை மாற்றம், பணியாளர்களின் மேம்பாடு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிலிருந்து பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடன் ஆகிய இருவரும் ஐ.சி.இ.டி. எனப்படும் முக்கியம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான திட்ட தொடக்கங்களை அறிவித்தனர்.
இதையும் படிங்க : Go First : கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு நிவாரணம்! திவால் தீர்வு அதிகாரியை நியமித்தது தீர்ப்பாயம்!