உத்ரகாண்ட் மாநில பெண் ஒருவர் பன்புல்புரா காவல் நிலையத்தில் தன் கணவன் தனக்கு முத்தலாக் வழங்கியதாகப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அப்பெண் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன் கணவர் வரதட்சணையாக பைக் ஒன்றைக் கேட்டு, அதைத் தராத காரணத்தாலேயே தனக்கு முத்தலாக் தந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரைப் பெற்ற காவல்துறையினர், புகார் செய்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது முத்தலாக்கின் பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்தப் பெண் அளித்தப்புகாரில், அப்பெண் கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி, அப்துல் காதர் என்பவருடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். பெண்ணின் குடும்பத்தார் தங்களால் முடிந்த அளவு வரதட்சணைத்தந்துள்ள நிலையில், அப்பெண்ணின் கணவர் மேலும் ஒரு பைக் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், அப்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பைக் தராத காரணத்தால், அவரது கணவரின் தாயார் மற்றும் குடும்பத்தினர் அவரது கருவினை கலைக்கச்சொல்லி வலியுறுத்தியுள்ளனர். அவர் கருவினை கலைக்க சம்மதம் தெரிவிக்காததால் அவரது கணவன் இவருக்கு முத்தலாக் சொல்லி, கடந்த பிப்.23அன்று இவரை வீட்டைவிட்டு துரத்தியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அப்பெண் தனது கொழுந்தனரால், தனக்கு பாலியல் தொல்லைகளும் நடந்ததாக அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக பன்புல்புரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.