பனாஜி : கோவா சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சியை பாஜக தக்கவைத்தது. இந்நிலையில் மூன்று முறை எம்எல்ஏ ஆன பிரமோத் சாவந்த் மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவை தொகுதிகளில் 20களில் பாஜக வென்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மை கட்சியான பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பிரமோத் சாவந்த் கோவா முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வு டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையில், ஆளுநர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மார்ச் 29 முதல் புதிய சட்டசபையின் இரண்டு நாள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்போது சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் எனத் தெரிகிறது.
மேலும், இந்த அமர்வின் போது புதிய சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் பதவிக்கு எம்எல்ஏ அலிக்சோ செக்வேராவை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.
இந்நிலையில், பாஜக தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த மாநிலத் தேர்தல்களில், 40 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக, பாஜக 20 இடங்களை வென்றது.
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் (எம்ஜிபி) இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களும், மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாவந்த் (48) வடகோவாவின் சங்கலிம் தொகுதி எம்எல்ஏ ஆவார். மாநிலத்தின் மறைந்த முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான மனோகர் பாரிக்கரின் 2017ஆம் ஆண்டு அமைச்சரவையில் சாவந்த் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரிக்கரின் மறைவுக்கு பின்னர் 2019ஆம் ஆண்டு இவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாவந்த் ஆயுர்வேத மருத்துவர் ஆவார். கோவிட் பெருந்தொற்று பரவலின்போது சாவந்த்தின் ஆயர்வேத பணிகள் பெரிதும் பாராட்டப்பெற்றன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பகவந்த் மான் அமைச்சரவையில் 10 'சிங்'கங்கள்!