டெல்லி: டெல்லியில் பல மின் நிலையங்களில் ஒரு நாளைக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருப்பதாகவும், இதனால் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அம்மாநில மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மத்திய மின்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்த சத்யேந்தர் ஜெயின், மத்திய அரசு போதிய அளவுக்கு நிலக்கரியை விநியோகிக்காவிட்டால், கடும் மின்தடை ஏற்படும் என்றும், அதனால் மருத்துவமனைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சேவை பாதிக்கப்படும் நிலை உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்திற்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்," டெல்லி அரசு நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தவறான தகவல்களை மக்களிடையே பரப்பியிருப்பது அதிருப்தியளிக்கிறது. நிலக்கரி தட்டுப்பாடு குறித்து டெல்லி அரசு குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானவை.
தாத்ரி, கஹல்கான், ஃபராக்கா உள்ளிட்ட பெரும்பாலான மின் நிலையங்களில் 5 முதல் 8 நாட்கள் வரை நிலக்கரி இருப்பு உள்ளது. ஆனால், ஓரிரு நாட்களுக்குத்தான் இருப்பு உள்ளதெனக் கூறி, டெல்லி அரசு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் நிலக்கரி விநியோகம் நடந்து வருகிறது.
உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தாத்ரி, உஞ்சஹார் மின் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தொடர்ந்து, நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. டெல்லி அரசின் புள்ளிவிவரங்கள் தவறானவை, டெல்லி அரசின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இயல்பைவிட அதிகரிக்கும் வெப்பம்... முன்னெச்சரிக்கை தேவை...