ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பரகலா பகுதியைச் சேர்ந்தவர், ராஜனி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தின் கடும் பொருளாதார நெருக்கடியைக் கடந்து ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.
முதுநிலைப் படிப்பை 2013ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்த இவர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பிற்கும் தகுதிப்பெற்றுள்ளார்.
ஆனால், குடும்ப பொருளாதாரச் சூழல் காரணமாக, ராஜனி வழக்கறிஞர் ஒருவரை மணந்துள்ளார். இரண்டு குழந்தைகள் ஆனபின்னர், வேலைவாய்ப்பிற்காக பல போட்டித் தேர்வுகளையும் எழுதியுள்ளார்.
இருப்பினும், ராஜனிக்கு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில், அவரின் கணவர் ரத்தக்குழாய் சார்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரின் வேலை பறிபோன நிலையில், அவரது குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், ராஜனி வேறு வழியின்றி ஹைதராபாத் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக சேர்ந்துள்ளார். ராஜனியின் 10,000 ரூபாய் வருமானத்தை மட்டும் நம்பியே அவரது குடும்பமும் இருந்துள்ளது.
கண்ணீர் கடலில் ராஜனி
இதையடுத்து, ராஜனி குறித்து ஈடிவி பாரத் ஊடகம் பிரத்யேக செய்தியை தெலுங்கு மொழியில் வெளியிட்டது. இச்செய்தி, தெலங்கானா மாநில மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் பார்வைக்கு சென்றுள்ளது.
ராஜனியின் கல்வித்தகுதியை ஆராய்ந்து, அவருக்கு பூச்சியியலாளர் (Assistant Entomologist) பணியை அமைச்சர் வழங்கியுள்ளார்.
இதற்கான, பணிநியமன ஆணையை அமைச்சரின் அலுவலகத்தில் ராஜனி நேற்று (செப். 20) பெற்றுள்ளார். அமைச்சர் உடனான சந்திப்பின்போது ராஜனி ஆனந்த கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் ராமா ராவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இன்றைய எனது பரபரப்பான நாளின் சிறந்த தருணம்.
புதிய பொறுப்பு பெற்றுள்ள ராஜனிக்கு எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேலையில்லாதவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் - கெஜ்ரிவால் வாக்குறுதி