தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை விமர்சனம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று (ஜனவரி 10) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
அப்போது பேசிய அன்பழகன், அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கும் அருகதை திமுகவுக்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் மக்கள் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபடுவதாகவும், அவர்களை விமர்சனம் செய்ய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நாவடக்கம் வேண்டும் என்ற அன்பழகன், முதலமைச்சரை தொடர்ந்து விமர்சனம் செய்தால் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.