பனிக்காலம் முழுவதும் தலைநகர் டெல்லி காற்றுமாசு சிக்கலால் பெரும் பாதிப்பு அடைவது வழக்கமான நிகழ்வாக இருந்துவருகிறது. டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதே காற்றுமாசுவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அதேவேளை ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கும் அவலமும் ஏற்படுகிறது. இதையடுத்து கடந்த சில வருடங்களாகவே டெல்லியில் பட்டாசு வெடிக்க பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. இந்தாண்டும் அரசு, நீதிமன்றம் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது.
தொடர்ந்து திணறும் தலைநகர்
அதையும் மீறி நவம்பர் 4ஆம் தேதி டெல்லியில் பட்டாசு வெடித்ததன் விளைவாக கடந்த ஐந்து நாள்களாக கடுமையான காற்று மாசு சிக்கலில் டெல்லி திணறிவருகிறது. இன்றும் டெல்லியின் முக்கிய பகுதிகளில் காற்றின் தரத்தை குறிக்கும் அலகான AOI(air quality index) 400க்கும் மேல் இருந்தன.
ஆனந்த் விகாரில் 436, ரோஹினியில் 429, காசியாபாதில் 437, பரிதாபாத்தில் 461, ஜஹாங்கிர்பூரில் 453, நோய்டாவில் 445 என காற்று மாசு அளவு தீவிரத்துடனே தொடர்கிறது.
காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) சான்றுகளின்படி, காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட குறியீடு 'சிறப்பானது', 51இல் இருந்து 100 வரையிலான குறியீடு 'திருப்திகரமானது'.
101 மற்றும் 200 இடைப்பட்ட பகுதி 'மிதமானது'. 301க்கும் 400க்கும் இடையே 'மிகவும் மோசமானது'. 401க்கு மேலே இருந்தால் 'கடுமையானது' எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பத்மஸ்ரீ விருது பெற்றார் சாலமன் பாப்பையா!