மகாராஷ்டிர மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வாகனம் ஒன்று வெடிபொருள்களுடன் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் மிரட்டல் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனின் சடலத்தை காவல் துறையினர் கண்டெடுத்தனர்.
இதையடுத்து இவ்விவகாரம் தீவிரமடையவே வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையிலெடுத்துள்ளது. இறந்த மன்சுக்கின் மனைவியை என்ஐஏ விசாரித்ததில், காரை காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் நான்கு மாதங்கள் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை பிப்ரவரி 5ஆம் தேதி தான் திருப்பி அளித்ததாகவும் அவர் கூறியதாகத் தெரியவந்துள்ளது. பின்னர், பிப்ரவரி 17இல் அந்தக் கார் திருடப்பட்ட நிலையில், பிப்ரவரி 25 அன்று வெடிபொருள்களுடன் அம்பானியின் வீட்டருகே கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி காவலர் சச்சின் வாஸ் என்ஐஏ கைதுசெய்தது. இந்நிலையில், கைதான காவலரை அம்மாநில காவல் துறை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. விசாரணை முடியும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரிணாமுலில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு துணைத் தலைவர் பதவி