ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் மாவட்டத்தில் உள்ள குர்சிபார் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் 3 மகள்களை வாளால் சரமாரியாக தாக்கிய அமர் தேவ் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது. இதுகுறித்து குர்சிபார் போலீசார் தரப்பில், லேபர் காலனியில் வசிக்கும் அமர் தேவ் ராய்-தேவந்தி ராய் தம்பதிக்கு வந்தனா ராய், ப்ரீத்தி ராய் மற்றும் ஜோதி ராய் ஆகிய மூன்று மகள்கள் இருந்தனர்.
அமர் தேவ் அடிக்கடி மனைவி தேவந்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மகள்களுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அமர் தேவ், வீட்டில் இருந்த வாளை எடுத்து மனைவி, மூன்று மகள்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ப்ரீத்தி ராய் தனது தாயின் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில், தேவந்தி ராயின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்து, 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், செல்லும் வழியிலேயே ஜோதி ராய் (18) என்பவர் உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அமர் தேவ் ராயை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீ பிடித்த கார்.. நொடிப்பொழுதில் தப்பிய கணவன்.. கண்முன்னே பறிபோன மனைவி உயிர்..