புதுச்சேரி: காவல்துறையில் பணியில் இருந்தபோது இறந்த காவலர்களை நினைத்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (அக்.21) நாடு முழுவதும் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
திபெத் எல்லையில் 1959ஆம் ஆண்டு நடந்த சண்டையின்போது எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பலர் காணாமல் போனார்கள். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், காவல் துறை டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா, ஏடிஜிபி ஆனந்த மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் இறந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: காவலர் நினைவு தினம்- வீரவணக்கம் செலுத்திய ஸ்டாலின்!