தெலங்கானா: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து, தெலங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்தில், கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது.
ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகள், சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். தண்டவாளத்தில் இருசக்கர வாகனங்களை எரித்தனர். நின்றிருந்த ரயிலுக்கும் தீ வைத்தனர். இந்த கலவரம் தெலங்கானா மற்றும் ஆந்திரமாநிலங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் கலவரத்தை தூண்டியதாக, டிஃபென்ஸ் அகாடமி நடத்தி வரும் சுப்பா ராவ் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், சுப்பா ராவ் ஹைதராபாத், குண்டூர் உள்ளிட்ட இடங்களில் டிஃபென்ஸ் அகாடமி நடத்தி வருவதாகவும், இந்த அகாடமி மூலம் ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வுகளை எழுத பயிற்சி அளித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் அமலுக்கு வந்தால், தனது டிஃபென்ஸ் அகாடமிகள் மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அஞ்சிய சுப்பா ராவ், தன்னிடம் பயின்ற மாணவர்களை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்